சரஸ்வதி துதி
சொல்லாய் சரசுவதி சொல்லு கலைமகளே
நல்ல தமிழுணர்வுத் தாயவளே-பொல்லாத
கொல்லுந் தமிழினத்துக் கூட்டார் கரங்களிலே
பொல்லாத் தமிழனுமா பேசு!
புதுசொற் தந்து புதியவைதான் தந்து
மதுதந்தாய் என்றனுக்கு வாணி-கதிகெட்டு
என்தமிழர்; சாதியின்று இட்டெழியர் ஆவதற்கும்
வன்படைத்தார் யாரெவரோ?வார்!
கற்பனையில் நான்புனையேன் காலம் வருத்தமுறும்
புற்றோடுங் கண்ணீர்க்குப் போதாகி-மற்குருதி
மண்ணீரம் பட்டு மருவும் இனத்தாடற்
புண்ணாய் எழுதியதே போ!
மொட்டே கரும்பே முகிழ்ப்பே கனிதரும்பா
இட்டே மருங்கில் இசைந்துறைவாய்-சொட்டே
அமுதஞ் சுகிக்கத் தருமென்றன் சிட்டே
குமுறும் எழுத்தெனதைக் கொள்!
கொலைஞர் வகுக்கக் குலவுமண் சாகப்
புலையர்போல் நின்றதொரு பித்தாய்-வலைஞர்கள்
கையில்வாள் வகுத்தெம் கனவுத் தமிழாளின்
மெய்யில்வாள் வைத்தார் விளம்பு!
நாவுக் கருங்கலமும் நந்தாக் கவிப்புலமும்
பாவுக் கழகார் பசுஞ்சீரும்-தூவுஞ்
சிறகே! எழில்மானே சித்தாகி மொய்க்கும்
உறவே எனக்காம் உயிர்!
மடவார் மலரே! மருக்கொழுந்தே! பொன்னே!
குடமார் விளக்கேயாம் கோவில்-புடமாகி
தெண்ணீர் வயற்கங்கைத் தேவி சரஸ்வதியாள்
கண்ணாய் மலர்ந்தவூர் காண்!
மலர்மகளாம் வாணி மனத்துறையுஞ் சோதி
புலர்வையப் போதாக்கும் பூவாள்-நிலம்பாடி
ஆடும் இவன்தோட்டம் அமர்ந்துறையும் பெண்ணேநீ
தேடும்என் செந்தமிழைத் தேர்!
கல்வி மற்றும் கலைகளில் சிறந்த ஞானத்தை வழங்குபவள் சரஸ்வதி தேவி. அந்த கலைமகளை போற்றும் இந்த துதி பாடலை தினமும் காலையில் நீராடிய பின்பு பூஜையறையில் சரஸ்வதி படத்திற்கு வெள்ளை நிற பூக்களை சமர்ப்பித்து, பத்திகள் கொளுத்தி வைத்து, கிழக்கு திசையை பார்த்தவாறு இந்த துதியை படிக்க வேண்டும். போட்டி தேர்வுகள், அரசு வேலையில் பதவி உயர்வுக்கான தேர்வுகள், கற்கும் கலைகளில் சிறக்க இத்துதியை தினமும் பாடிவர சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்கும்.
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்ற நமது பண்டைய தமிழ் சொல்வழக்கிலிருந்தே கல்வி கற்றவர்கள் இறைவனுக்கு நிகரானவர்கள் என நமது முன்னோர்கள் போற்றியிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. நமது மதத்தில் கல்விக்கடவுளாக போற்றப்படுவது சரஸ்வதி தேவியாவாள் புலவர்கள், கவிஞர்கள் ஆகியோர்களின் இதயத்திலும், சிந்தையிலும் வாழ்பவள். பெரும்பாலானவர்களுக்கு செல்வகடவுளான லட்சுமியின் கடாட்சம் சுலபமாக கிட்டிவிடும். ஆனால் சரஸ்வதி தான் விரும்பும் மனிதர்களுக்கே அநுகிரகம் புரிவாள். அந்த தேவியின் கடைக்கண் பார்வை நம்மீது பட இத்துதியை பாடிவர வேண்டும்.