உச்சிஷ்ட கணபதி மந்திரம்
ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா
மிகுந்த ஆற்றல் வாய்ந்த இந்த உச்சிஷ்ட கணபதி மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் கூறி வழிபடலாம் என்றாலும் மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று மாலை 5 லிருந்து 6 மணிக்குள்ளாக, வீட்டில் இருக்கும் கணபதி படத்திற்கு பூக்களை சாற்றி, தூபங்கள் கொளுத்தி, கொழுக்கட்டை அல்லது லட்டு இனிப்புகளை நிவேதனம் வைத்து, விநாயகருக்கு நேராக அமர்ந்து கொண்டு இம்மந்திரத்தை 108 அல்லது 1008 முறை கூறி வழிபட வேண்டும். பின்பு நைவேத்திய இனிப்புகளை நீங்களும் உங்களை சார்ந்தவரும் உண்ண வேண்டும். இதனால் உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பிய ஒவ்வொன்றும் உங்களுக்கு கிடைக்க தொடங்கும். கணவன் மனைவிக்கு இடையே ஆனா ஒற்றுமை ஓங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவர். கண் திருஷ்டி நீங்கும். நோய்கள் அகலும். இந்த மந்திரத்தை 16000 உரு ஜெபித்து சித்தி செய்வதால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
நமது மதம் மற்றும் கலாச்சாரத்தில் எந்த ஒரு விடயத்தையும் தொடங்கும் முன்பு அது சிறப்பாக நடந்து முடிய இறைவனுக்கு பூஜைகள் செய்து வணங்கி அக்காரியத்தை சிறப்பான முறையில் செய்ய தொடங்குவது மிக நெடுங்காலமாக இருந்து கடைபிடிக்கப்படும் வழக்கமாகும். மானிடர்களாகிய நமக்கு தெரிந்த உலகத்தில் அப்படி எல்லாவற்றிற்கும் முழு முதல் நாயகனாகிய கணபதி அல்லது விநாயக பெருமானையே நாம் முதல் கடவுளாக வழிபடுகிறோம். மனிதர்களாகிய நாம் மட்டுமல்ல வானுலகில் வாழும் தேவர்களும் தங்களின் எந்த ஒரு காரியமும் சிறப்பான வெற்றியடைய அனைத்து லோகங்களுக்கும் நாயகனாகிய கணபதியையே வழிபடுகின்றனர்.
அதிலும் உச்சிஷ்ட கணபதியை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இந்த கணபதி பெரும்பாலும் கோவில்களிலும், வீடுகளிலும் செய்யப்படும் ஹோமங்களில் ஆவாஹனம் செய்யப்பட்டு வழிபடப்படுகிறார். ஒருவரின் குறைகளையும், குற்றங்களையும் பெரிது படுத்தாமல் அவரிடம் தூய்மையான பக்தி மட்டும் இருக்கும் பட்சத்தில் அவரை மன்னித்து அவருக்கு நன்மையளிக்கும் குணம் கொண்டவர் உச்சிஷ்ட கணபதி. அவரை இம்மந்திரம் சொல்லி வழிபடுவது சிறப்பானதாகும்.