வாழ்க்கையில் நாம் விரும்பிய அனைத்தையும் பெறுவதற்கு நல்ல பொருளாதார வளம் நமக்கு இருக்க வேண்டும். வசதிகள் அனைத்தும் இருந்தாலும் அத்தனை இன்பங்களை அனுபவிக்கவும், எப்போதும் மகிழ்ச்சியாக வாழவும், மனதில் பயங்கள் மற்றும் கவலைகள் இல்லாமல் வாழும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும். செல்வவளமிக்க வாழ்க்கையை வழங்கும் தெய்வமாக திருமாலின் ஒரு வடிவமான ஸ்ரீனிவாசன் இருக்கிறார். அவரை வழிபடுவதற்கான “ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரம்” இதோ
ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரம்
ஓம் நிரஞ்ஜநாய வித்மஹே நிராபாஸாய
தீமஹி தந்நோ ஸ்ரீநிவாஸஹ் ப்ரசோதயாத்
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவான ஸ்ரீனிவாசனை போற்றும் காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் பெருமாளை மனதில் நினைத்து 108 முறை துதித்து பெருமாளை வழிபடுவதால் நீங்கள் விரும்பியது கிடைக்கும். ஆனந்தமான, வளமிக்க வாழ்வு அமையும். பாவங்களைப் போக்கும். 16 வகையான பேறுகளை தரும். மரண பயம் நீங்கும். இறுதி காலத்தில் முக்தி கிடைக்கும். மனதில் நிம்மதியான உணர்வு நீடித்திருக்கும்.
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பகவானை அறிவோம். பந்தங்களில் இருந்து விடுபடச் செய்யும், அந்த பரம்பொருளின் மீது தியானம் செய்வோம். ஸ்ரீனிவாசனான அவன் நம்மை காத்து அருள்புரிவான் என்பது இதன் பொருளாகும். மும்மூர்த்திகளில் அண்ட சராசரங்களையும், அதில் வாழும் அனைத்து உயிர்களையும் காக்கும் கடவுளாக திருமால் இருக்கிறார். பாற்கடலில் ஸ்ரீனிவாசனாக இருக்கும் பெருமாளின் இந்த காயத்ரி மந்திரம் துதித்து வழிபடுவதால் நமக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகிறது.